மும்பையில் கனமழை: தண்டவாளங்கள் மூழ்கியதால் ரயில் சேவை பாதிப்பு


மும்பை: மும்பையில் நேற்று இரவு பெய்த கனமழையால் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவமழை தொடங்கியது. தற்போது மாநிலத்தின் பல நகரங்களில் தொடர்மழையாக பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 20) மும்பையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் விடிய விடிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பால்காரில் பெய்த கனமழையால் தேஹார்ஜே ஆற்றின் மேல் உள்ள பாலம் நீரில் மூழ்கியது.

மேலும், போயசர் மற்றும் உம்ரோலி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலம் இடிந்து விழுந்ததால் பால்கர் மற்றும் மனோர்வாடா இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் பிவாண்டி நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மும்பை, தானே மற்றும் பிவாண்டியில் குளிர்ந்த வானிலையாக மாறியுள்ளது.

இந்த நிலையில், மும்பையில் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் இன்றும் நாளையும் (ஜூன் 20 மற்றும் 21) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 22 முதல் 25-ம் தேதி வரை லேசான மழை பெய்யும். இந்த காலக்கட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

x