ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழப்பு


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண் உட்பட 4 மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடிப்படை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இருவர் கைது: இந்நிலையில் டோன்ட்டோ- கோயில்கேரா பகுதியில் நேற்றுகாலை அதிரடிப்படை போலீஸாருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட் டது. இதில் ஒரு பெண் உட்பட மாவோயிஸ்ட்டுகள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்த என்கவுன்ட்டரில் பிராந்திய கமாண்டர், பிராந்திய துணை கமாண்டர், ஏரியா கமாண்டர் உட்பட 4 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்தனர். மற்றொரு ஏரியா கமாண்டர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்துதேடுதல் வேட்டை நடைபெறுகிறது” என்றார்.

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட நிலையில் அடுத்த இரு நாட்களில் இந்த என்கவுன்ட்டர் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.