தொழில்நுட்ப உலகில் ஏகபோகம் இருக்க கூடாது: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் @ ஜி7 மாநாடு


அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி

புதுடெல்லி: தொழில்நுட்ப உலகில் ஏகபோகம் இருக்கக் கூடாது என்று ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இத்தாலியின் அபுலியா மாகாணம், ஃபசானோ நகரில் ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. கடந்த 14-ம் தேதி நடைபெற்ற 2-ம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

அண்மையில் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 2,600-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன. ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 1.5 கோடி தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். 97 கோடி வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது வாக்குரிமையை செலுத்தினர். வாக்குகள் எண்ணப் பட்டு சில மணி நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதிநவீன தொழில்நுட்பங்களால் இந்திய பொதுத்தேர்தல் நேர்மை, வெளிப்படைத்தன்மை யுடன் நடத்தப்பட்டது. மக்களின் தீர்ப்பால் 3-வது முறையாக எனது நாட்டுக்கு சேவையாற்ற உள்ளேன். இந்தியாவின் ஜனநாயகம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு ஆகும். ஒருபுறம் தொழில்நுட்பத்தின் உதவியால் நிலவில் கால் பதிக்கிறோம். மறுபுறம் சைபர் தாக்குதல் உள்ளிட்ட சவால்கள் அதிகரித்து வருகின்றன.

தொழில்நுட்பத்தைஆக்கப்பூர்வமாக பயன்படுத்திமனிதகுலத்தை மேம்படுத்தவேண்டும். தொழில்நுட்பத்தை அழிவுக்கு பயன்படுத்துவதை முழுமையாக தடுக்க வேண்டும். தொழில்நுட்ப உலகில் ஏகபோகம் இருக்கக்கூடாது. அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

தொழில்நுட்பத்தின் பலன்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். இதை கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவு சார்ந்த கொள்கையை இந்தியா வரையறுத்துள்ளது. வெளிப்படைத்தன்மை, நேர்மை, பாதுகாப்பு, பொறுப்புணர்வுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கையாள வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை தடுக்க இந்தியா சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கரியமில வாயு மாசு என்ற இலக்கை நிர்ணயித்து உள்ளோம். சர்வதேச அரங்கில் தெற்கு நாடுகளின் உரிமைகளுக்காக இந்தியா தொடர்ந்து குரல் எடுக்கும். ஜி7 உறுப்பு நாடுகளுடன் இந்தியா இணைந்து பணியாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

வைரலாகும் மோடி, மெலோனி செல்ஃபி: இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிரேசில், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டை நடத்திய இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மிகச் சிறப்பாக வரவேற்றார். இருவரும் இணைந்து பாசம், நட்புறவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மெலோனி பகிர்ந்த வீடியோவில், “மெலோடி (மெலோனி + மோடி) டீமிடம் இருந்து ஹலோ என்று அவர் கூற, பின்னர் பிரதமர் மோடி உரக்க சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

இந்த செல்ஃபி வீடியோ தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா, இத்தாலி நட்புறவு பல்லாண்டு நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.