சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட் உயிரிழப்பு


ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் அபுஜ்மார் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் (என்கவுன்ட்டர்) 8 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

சத்தீஸ்கரில் நாராயண்பூர், பீஜப்பூர், தண்டேவாடா ஆகிய மாவட்டங்களில் அபுஜ்மார் வனப்பகுதி பரவியுள்ளது. இங்குள்ள மலைப் பகுதிகளும் அடர்ந்த காடுகளும் மாவோயிஸ்ட்களின் புகலிடமாக உள்ளது.

இந்நிலையில் நாராயண்பூர், கான்கெர், தண்டேவாடா, கொண்ட காவ்ன் ஆகிய 4 மாவட்டங்களின் ரிசர்வ் போலீஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் இந்தோ திபெத்திய எல்லை போலீஸார் இணைந்து அபுஜ்மார் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தேடுதல் வேட்டை கடந்த 12-ம் தேதி தொடங்கிய நிலையில் நாராயண்பூர் மாவட்ட வனப் பகுதியில் கடந்த 2 நாட்களாக மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

பாதுகாப்பு படை வீரர் ஒருவர்.. இந்நிலையில் இரு தரப்பினர் இடையே நேற்று காலையில் மீண்டும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 8 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

ரூ.38 லட்சம் வெகுமதி முன்னதாக, நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் – மாவோயிஸ்ட்கள் இடையே கடந்த 7-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 6 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். இவர்களைப் பற்றிய தகவலுக்கு மொத்தம் ரூ.38 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.