ஜூன் 22-ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்


புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடைபெற இருப்பதாக நேற்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 53-வது ஜிஎஸ்டி கூட்டம் ஆகும்.

2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஜிஎஸ்டி கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக மாநில நிதிஅமைச்சகர்களுடன் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு ஆன்லைன் கேமிங் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டிவிதிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், வரும் வாரம் நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங் மீதான வரி குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

52-வது ஜிஎஸ்டி கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. தற்போது பாஜக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. புதிய அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.