ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஏன்? : காங். கேள்வி


கோப்புப்படம்

புதுடெல்லி: பாகிஸ்தான் தலைவர்களின் வாழ்த்துக்களுக்கு பதில் அளிக்க நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு, கடந்த மூன்று நாட்களில் ஜம்மு காஷ்மீரில் நடந்த மூன்று தீவிரவாத தாக்குதல் குறித்து பேச முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘பிரதமர் மோடியின் கண்கள் ஏன் ரெயிசியின் மீதில்லை’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கெரா கூறியிருப்பதாவது: "கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலிகொடுத்துள்ளது. காஷ்மீரில் கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலிகளில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். பணிகள் வழக்கம் போல சுழல்கின்றன.

மோடி மற்றும் அவரது புதிய என்டிஏ அரசு பதவி ஏற்ற நிலையில், பல நாட்டுத்தலைவர்கள் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது, ஜம்மு காஷ்மீரின் ரெயிசி மாவட்டத்தில், ஷிவ் கோரி கோவிலில் இருந்து கத்ராவுக்கு பக்தர்களை அழைத்துச் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 விலைமதிப்பற்ற உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. குறைந்தது 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அப்பாவி குழந்தைகள் கூட தப்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு, தன்னை புனிதர் என்று அழைத்துக் கொள்ளும் பிரதமரிடமிருந்து அனுதாபம் பெறக் கூட தகுதி இல்லையா?

கத்துவா பகுதியில் நடந்த மற்றொரு தீவிரவாத தாக்குதலில் ஒரு குடிமகன் காயமடைந்துள்ளார். ஜுன்11ம் தேதி தோடாவின் சத்ரகலாவில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் 6 பாதுகாப்பு வீரர்கள், ஒரு குடிமகன் படுகாயமடைந்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, சத்தர்கலா பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் கூட்டுப்படையின் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களில் ஜம்மு காஷ்மீரில் பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தநிலையில், பாகிஸ்தான் தலைவர்களான நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளுக்கு பதில் அளிப்பதில் பிரதமர் மும்முரமாக இருக்கிறார். ஆனால் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒருவார்த்தை கூட குறிப்பிடவில்லை. அவர் ஏன் தொடர்ந்து மவுனம் காக்கிறார்?

ஜம்மு காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்பும் என்று உரத்த குரலில் மார்தட்டிக்கூறிய பாஜகவின் வெற்று கூற்று தற்போது அம்பலப்பட்டுவிட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதே உண்மை. அவர்களின் நயா காஷ்மீர் திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதே இதற்கு சாட்சி" இவ்வாறு பவன் கெரா தெரிவித்துள்ளார்.

மேலும் கெரா தனது அறிக்கையில் மூன்று விஷயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளார். அவை: > கடந்த 2 ஆண்டுகளில் பிர் ரஞ்சால் பிராந்தியம் - ராஜோரி மற்றும் பூஞ்ச் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தின் மையமாக மாறியுள்ளது உண்மையா இல்லையா? இந்த பகுதிகளில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் இந்தத் தீவிரவாத தாக்குதல்கள் மூலமாக 35 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனரா இல்லையா? இப்போது தீவிரவாதம் அண்மை மாவட்டமான ரெயிசிக்கும் பரவி விட்டது. இது அமைதி என்று கருதப்படுமா?

> மோடி அரசாங்கத்தின் கீழ் நமது பாதுகாப்பு மையங்களான சிஆர்பிஎஃப் முகாம்கள், ராணுவ முகாம்கள், விமான நிலையங்கள், ராணுவ மையங்கள் மீது குறைந்தது 19 பெரிய தாகத்குதல்கள் நடந்திருப்பது உண்மை இல்லையா? 2016ல் பதன்கோட்டில் நடந்த தாக்குதலை விசாரிக்க மோடி அரசு ஐஎஸ்ஐ அழைத்தது உண்மையல்லவா?

> ஜம்மு காஷ்மீரில் நடந்த 2,262 தீவிரவாத தாக்குதல்களில் 363 பொதுமக்கள் இறந்ததும், 596 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் மோடி அரசு நமது நாட்டின் பாதுகாப்பை அச்சுருத்தலுக்கு உள்ளாக்கி இருப்பது உண்மையல்லவா? " என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.