மோடி 3.0 அமைச்சரவை மீதான விமர்சனம் முதல் செல்வந்தப்பெருந்தகை கொந்தளிப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> புதுச்சேரியில் விஷவாயு தாக்கி சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு: புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது பாட்டி செந்தாமரை. இவர் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். உடனே அவரது 55 வயது மகள் காமாட்சி, செந்தாமரையை தூக்கச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்த பேத்தி பாக்கியலட்சுமி கழிப்பறைக்குச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து மூவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே செந்தாமரையும் காமாட்சியும் பரிதாபமாக உயிரிழந்தனர். பாக்கியலட்சுமி வீட்டில் கழிப்பறையில் இருந்து விஷவாயு வெளியேறிதால் 2 பேரும் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

விஷவாயு பரவியதால் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராணி என்ற 15 வயது சிறுமியும் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை, போலீஸார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கராமி, “பாதாளச் சாக்கடை திட்டம் முழுமையடையும் நிலையில் உள்ளது. வீட்டுக்கு வீடு இணைப்பு தருவது நடந்து வருகிறது. இணைப்பு தரும் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளது. அதனால் விஷவாயு உருவாகியுள்ளது.

இது குறித்து முழுமையாக விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடக்கக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தும். புதுநகரில் ஆய்வு செய்து சரி செய்யப்படும். உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், மற்ற இரு பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

> ராணுவ விமான விபத்தில் மலாவி துணை அதிபர் உயிரிழப்பு: கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் பயணித்த 9 பேரும் உயிர் பிழைக்கவில்லை. இதனை மலாவி நாட்டின் அதிபர் லாசரஸ் சக்வேரா உறுதிப்படுத்தியுள்ளார். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்று மலாவி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

> ஜூன் 20-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24-ம் தேதி தொடங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பால் பேரவைக் கூட்டத் தொடர் 20-ம் தேதியே தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு தற்போது அறிவித்துள்ளார்.

> விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்அறிவிப்பு: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, திமுகவின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

> மத்திய அமைச்சரவை மீது விமர்சனம்: "புதிதாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் முகமும் இல்லை. இது உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உலகமே ஒரு குடும்பம் எனக் கூறக்கூடியவர்கள் நாம். நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியைக் கொண்டுள்ள ஒரு பிரிவினரை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைப்பது நாட்டின் மரியாதையை பாதிக்கும்” என்று உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் வரை பாஜகவின் நாடாளுமன்ற ஜனநாயக அணுகுமுறை மாறாது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய், இம்முறை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 230 எம்பிக்களை இடைநீக்கம் செய்வார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

> ‘மத்திய அமைச்சரவையில் 20 வாரிசுகள்’ - ராகுல் காந்தி விமர்சனம்: தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பதவி பெற்றுள்ள வாரிசுகளின் பெயர்களை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கட்சியில் தலைமுறைகளை கடந்து போராட்டம், சேவை, தியாகம் செய்தவர்களை வாரிசு அரசியல் என சொல்பவர்கள், அதிகாரத்தை வாரிசுகளுக்கு பகிர்ந்தளித்துள்ளனர். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு நரேந்திர மோடி என்னச் சொல்ல போகிறார்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

> “அமராவதியே ஆந்திராவின் தலைநகர்” - சந்திரபாபு நாயுடு: “அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை” என்று பதவியேற்பதற்கு ஒருநாள் முன்னதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக புதன்கிழமை சந்திரபாபு பதவியேற்க உள்ளார்.

> இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21-ம் தேதிக்கு தள்ளிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஜூன் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு, நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுகிறது. இத்தேர்வு ஜூலை 21-ம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,768 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ள இத்தேர்வுக்கு 26,510 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

> நீட் கவுன்சிலிங் தொடங்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம்: நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமைக்கு எதிராக சுமார் 10 பேர் கடந்த ஜூன் 1-ம் தேதி வழக்கு தொடுத்தனர். தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா இணைந்து இதனை விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள் "இந்தத் தேர்வின் நோக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அதற்கான பதிலை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும். அந்த வகையில் விளக்கம் கேட்டு என்டிஏ-வுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். அதே நேரத்தில் கவுன்சிலிங் தொடங்கலாம் என்றும். நாங்கள் கவுன்சிலிங்கை நிறுத்தவில்லை” என தெரிவித்தனர்.

> “காங்கிரஸை வலுப்படுத்தக் கூடாதென சொல்வது தவறு!”: “திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை,” என்று சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசினார்.

மேலும், “நமக்கென்று ஒரு கொள்கை, ஒரு பாதை என எல்லாமே இருக்கிறது. கூட்டணி என்பது வேறு. தேர்தல் காலங்களில் கூட்டணி வைக்கிறோம். பாசிசத்தை எதிர்க்கும்போது தைரியமாக எதிர்க்கிறோம் .தோழமைகளுடன் சேர்ந்து எதிர்க்கிறோம். நீட் தேர்வை திமுக எதிர்த்தால், காங்கிரஸ் கட்சியும் அந்த தேர்வை எதிர்க்கிறது. இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறோம். அது வேறு... இது வேறு. ஆனால், நம்முடைய கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். அதேபோல், வாக்கு வங்கியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.

x