பாக்., சீனா உறவு குறித்த ஜெய்சங்கர் விளக்கம் முதல் நீட் புகார் மீது உச்ச நீதிமன்றம் கருத்து வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> ‘நீட் தேர்வின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது’ - உச்ச நீதிமன்றம்: நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு எதிராக சுமார் 10 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்றும் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமனுல்லா அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்வின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது. பதில் தேவை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மருத்துவ கவுன்சிலிங்-க்கு தடைவிதிக்க மறுத்து, கவுன்சிலிங்கை தொடங்கலாம் என தெரிவித்தனர். இந்த மனுக்களுக்கு பதில் அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் வழக்கை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

> ஜூன் 18-ல் வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி!: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 18 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரணாசி தொகுதியில் தான் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

> வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றார் ஜெய்சங்கர்: "பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நம் உறவும் வெவ்வேறு. அவற்றுடனான பிரச்சினைகளும் வெவ்வேறு. பாகிஸ்தானுடன் ஆண்டாண்டு காலமாக இருக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாத சிக்கலுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்" என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மோடி மோடி 3.0 அமைச்சரவையில், வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் இன்று (ஜூன் 11) மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

> கட்சிகளின் பிரச்சாரம் குறித்து மோகன் பாகவத் விமர்சனம்: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் நாகரீகத்தை கடைபிடிக்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். மேலும் அவர், "உண்மையான சேவகர்கள் ஒருபோதும் ஆணவப்படமாட்டார்கள், அவர்கள் பொதுவாழ்க்கையில் எப்போதும் பொறுமையைக் கடைபிடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

> புதுவையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது பாட்டி செந்தாமரை (72). இவர் இன்று காலை வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். உடனே அவரது மகள் காமாட்சி (55), செந்தாமரையை தூக்கச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த பேத்தி பாக்கியலட்சுமி கழிப்பறைக்குச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே செந்தாமரையும் காமாட்சியும் பரிதாபமாக உயிரிழந்தனர். பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாக்கியலட்சுமி வீட்டில் கழிப்பறையில் இருந்து விஷவாயு வெளியேறிதால் 2 பேரும் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

> கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் உயர்வு: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

> கொலை வழக்கில் கன்ன நடிகர் தர்ஷன் தூகுதீபாவிடம் விசாரணை: பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக, தர்ஷன் மனைவி உட்பட 10 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

> பாக். அணி மீது வாசிம் அக்ரம் தாக்கு: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் 119 ரன்களுக்கு இந்திய அணியை சுருட்டிய பிறகு அந்த இலக்கைக் கூட எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் கொதிப்படைந்து பேசியுள்ளனர். வாசிம் அக்ரம் கூறும்போது, “அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடி வருகின்றனர். நான் அவர்களுக்கு பாடம் எடுக்க முடியாது.

பாகிஸ்தான் வீரர்கள் நாம் சரியாக ஆடாவிட்டால் பயிற்சியாளரைத்தான் தூக்குவார்கள். நம்மை அணியை விட்டு அனுப்ப மாட்டார்கள் என்று நினைக்கின்றனர். பாபர் அஸமுக்கும் ஷாஹின் அஃப்ரீடிக்கும் பேச்சுவார்த்தைக் கிடையாது, இன்னும் சில வீரர்கள் சிலருடன் பேச மாட்டார்கள். நாட்டுக்காக ஆடும்போது சுயநலமும் ஈகோவும் இருந்தால் உருப்படுமா” என்று கடுமையாகச் சாடினார்.

> நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் வாழ்த்து: மோடி 3.0 அமைச்சரவையில் மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி வாழ்த்து தெரிவித்துள்ளார். சவாலான காலக்கட்டங்களில் இந்தியா வழங்கிய வலுவான ஆதரவினை பாராட்டிய அலி, இருநாடுகளின் பொருளாதர உறவுகள் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

> மலாவி துணை அதிபர் பயணித்த விமானம் மாயம்: கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் மாயமாகியுள்ளது. அவருடன் மேலும் 9 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர். தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

x