பேருந்து மீது தீவிரவாதிகள் தொடர்ந்து சுட்டதால் உயிரிழந்தது போல நடித்தோம்: காஷ்மீரில் உயிர் தப்பியவர்கள் பேட்டி


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோயிலுக்கு சென்றுவிட்டு கட்ரா நோக்கிநேற்று முன்தினம் 53 யாத்ரீகர்கள்பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் இந்திய ராணுவத்தினர் தீவிரதேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் ரஜவுரி மற்றும் பூஞ்ச் பகுதியில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான தி ரெஸிஸ்டன்ஸ் ஃபிரன்ட் (டிஆர்எஃப்) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறியதாவது: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த பிறகும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தனர். தொடர்ந்து சில நிமிடங்கள் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலால் நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். இருந்தபோதும் நாங்கள் அமைதியாக இருந்தோம். உயிரிழந்தது போலநடித்தோம். இதையடுத்து தீவிரவாதிகள் சென்றுவிட்டனர். அதன் பின்னர் தான் எங்களை மீட்புப் படையின் மீட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உயிர் பிழைத்த மற்றொரு பயணி கூறும்போது, “பேருந்து மீது 6 அல்லது 7 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்து விழுந்தபோதும் அவர்கள் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தவில்லை. பேருந்தின் பின்புறமாக வந்த தீவிரவாதி ஒருவர் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்தார்” என்றார்.

அமெரிக்க துப்பாக்கிகள்: இந்தத் தாக்குதலில் அமெரிக்காவில் தயாரான எம்-4 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இந்தத் தாக்குதலில் வெளிநாடுகளைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ரியாஸி மலைச்சிகரங்களில் உள்ள வனப்பகுதிகளில் மறைந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் தயாரான எம்4 ரக துப்பாக்கிகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது தொடர் பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

டிரோன்கள்: இந்தவகை துப்பாக்கிகள் தற்போது பாகிஸ்தானின் சிறப்புப்படைகள், சிந்து பகுதியிலுள்ள சிறப்புப் பாதுகாப்புப் படையிடம் மட்டுமே உள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் மறைந்திருக் கும் தீவிரவாதிகளைத் தேடிப்பிடிக்க டிரோன்கள் பயன்படுத் தப்பட்டுள்ளன என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 5 சிறப்புப்படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.