“தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்” - ஒடிசா தமிழர் வி.கே.பாண்டியன் அறிவிப்பு


விகே பாண்டியன் - நவீன் பட்நாயக் | கோப்புப் படம்.

புதுடெல்லி: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன்பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழருமான வி.கே.பாண்டியன் மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நவீன் பட்நாயக்கை பார்த்து அரசியலுக்கு வந்தவன். அவருக்கு உதவி செய்வதற்காக மட்டுமே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். இப்போது தீவிர அரசியலில் இருந்து விலக மனப்பூர்வமாக முடிவு செய்துள்ளேன்.

எனது இந்த அரசியல் பயணத்தில் யாரையாவது காயப்படுத்திஇருந்தால் அதற்காக வருந்துகிறேன். பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு நான் காரணமாக இருந்திருந்தால் அதற்காக நான் ஒட்டுமொத்த கட்சியினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்கு சேவையாற்றவே ஐஏஎஸ் பணிக்கு வந்தேன். அதன் மூலமாக ஒடிசா மக்களின் அன்பை பெற்றேன். வேறு எந்த சொத்துகளையும் நான் இதுவரை சம்பாதிக்கவில்லை.

ஒடிசா மீதான நவீன் பட்நாயக் கின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்த நான் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அவரின்எதிர்பார்ப்பு. அதன் விளைவாக, சுகாதாரம் கல்வி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைக்கப்பட்டது. இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக உழைத்தது பெரும் திருப்தியை அளித்தது. ஒடிசாவின் பள்ளிகளை மேம்படுத்துவதில் நான் அரசு பள்ளியில் படித்த அனுபவமே கை கொடுத்தது. நவீன் பட்நாயக்கிடம் கற்றுக் கொண்டது என் வாழ்நாள் முழுமைக்கும் பயனளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநில தேர்தலில் பிஜு ஜனதா தள கட்சியின் தோல்விக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நவீன் பட்நாயக்கின் உதவியாளருமான வி.கே.பாண்டியன்தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. ஒடிசாவை மண்ணின் மைந்தர் ஆளாமல் தமிழர் ஆளலாமா என்ற தீவிரமான பிரச்சாரத்தை பாஜகவினர் கையில் எடுத்தனர். அதற்கு அவர்களுக்கு பெரும் பான்மை வெற்றியும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.