மோடி பதவியேற்பு விழா: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு


புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் விழாவில் நரேந்தி மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பினை ஏற்று கார்கேவும் அந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் ஜோஷி மூலம் கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில் நேற்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அளித்த ஊடகப் பேட்டியில், “வெளிநாட்டுத் தலைவர்களுக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸுக்கு, இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு அழைப்பு வரவில்லை.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கார்கே பங்கேற்பை இன்று காங்கிரஸ் உறுதி செய்துள்ளது. இண்டியா கூட்டணித் தலைவர்களிடம் ஆலோசித்து இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மம்தா பங்கேற்க மறுப்பு: இதனிடையே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “எனக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. ஒருவேளை அழைப்பு வந்தாலும் நான் விழாவுக்குச் செல்லப்போவதில்லை. நான் ஏற்கெனவே மோடிக்கு வாக்களிக்காத மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டேன். ஆகையால் அரசமைப்புக்கு எதிரான, சட்டவிரோதமான கட்சி ஆட்சி அமைப்பதற்கு வாழ்த்து தெரிவிக்க முடியாது” என்றார்.

காந்தி நினைவிடத்தில் அஞ்சலி: முன்னதாக பதவியேற்றுக் கொள்வதையொட்டி மோடி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாயி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கும் சென்றார். போர் நினைவிடத்தில் மோடியுடன் ராஜ்நாத் சிங்கும் இருந்தார். தொடர்ந்து பிரதமர் இல்லத்தில் எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தேச அமைச்சர்கள் பட்டியல்: பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மூத்த தலைவர்கள் பியுஷ் கோயல், நிதின் கட்கரி ஆகியோரும் இன்று பிரதமருடன் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா, அர்ஜுன் மேக்வால், சிவ்ராஜ் சிங் சவுகான், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் கட்டார், கிரண் ரிஜிஜு, ஹர்ஷ் மல்ஹோத்ரா. ரக்‌ஷா கட்சே, பண்டி சஞ்சய், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதின் பிரசாத், ரவ்னீத் பிட்டு, சாந்தனு தாக்கூர், ஹர்தீப் புரி, கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ராம்நாத் தாக்கூர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. அதேபோல் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம்மோகன் நாயுடு அமைச்சராக பதவியேற்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நிகழ்கையில் அவரே நாட்டின் மிக இளம் வயது அமைச்சராக இருப்பார்.

x