என்டிஏ கூட்டம் ஹைலைட்ஸ் முதல் நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பிரதமர் மோடி: தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்களின் பட்டியலையும், என்டிஏ கூட்டத்தின் தீர்மானத்தையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்து, பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன் அடிப்படையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பு நிகழ்வு நடைபெறும்போது, பிரதமருடன் பல்வேறு அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, புதிய அரசில் கூட்டணி கட்சிகளுக்கு உள்ள பிரதிநிதித்துவம் தொடர்பாக அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

> என்டிஏ நாடாளுமன்றக் கட்சித் தலைவராக மோடி தேர்வு: முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களும், புதிதாக எம்பிக்களாக தேர்தெடுக்கப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா அதனை வழிமொழிந்தார். தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

> அரசியல் சாசனத்தை வணங்கிய பிரதமர் மோடி!: என்டிஏ கூட்டத்துக்கு வந்ததுமே அரசியல் சாசன புத்தகத்தைத் தொட்டு நெற்றியில் வைத்து தலை வணங்கிய பின்பே இருக்கையில் அமர்ந்தார் பிரதமர் மோடி.

மேடையில் பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்த 14 கட்சிகளில் 9 கட்சிகளின் தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் அனைத்து தலைவர்களும் ‘மோடி, மோடி’ என முழக்கமிட்டனர். கூட்டம் முழுவதுமே சிரித்த முகமாக காட்சியளித்தார் மோடி. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவருடனும் சிரித்தவாறு பேசிக்கொண்டே இருந்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஒருவித இறுக்கமான முகத்துடனே காணப்பட்டார். அவரின் கட்சி ஓர் இடத்தில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி இரண்டு வினாடிகள் மட்டுமே பேசிவிட்டு அமர்ந்தார். லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் பேசி முடித்ததும், அவரை கட்டியணைத்து முத்தமிட்டார் மோடி.

நிதிஷ் குமார் தனது பேச்சில் எதிர் கூட்டணியான இண்டியா கூட்டணியை கிண்டலடித்து பேச, மோடி உட்பட அவையில் இருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.

ஓபிஎஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ரவீந்திரநாத் போன்றோர் முன்வரிசையில் அமர, எல்.முருகன், அண்ணாமலை முதலானோர் பின்வரிசையில் அமர்ந்தனர்.

பிரதமர் மோடி பேசுகையில், “தமிழக பாஜக அணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு எம்பிக்கள் யாரும் இல்லை. ஆனால் தொண்டர்கள் பாஜக கொடியை உயர்த்தி பிடித்துள்ளனர். இன்று தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் எங்களது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது” என்று பெருமையாக கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் கணிசமான இடங்களில் பாஜக தோல்வியை தழுவியது. தோல்வியால் துவண்டு விடக்கூடாது என்பது போல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்த வந்தபோது அவரை தோளில் தட்டிக்கொடுத்தார் பிரதமர் மோடி.

> “ஏழை, நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே முன்னுரிமை”: என்டிஏ கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய சூழ்நிலையில், நாடு தேசிய ஜனநாயக கூட்டணியை மட்டுமே நம்புகிறது என்பதை 2024 தேர்தல் மீண்டும் வலுப்படுத்தி உள்ளது. நாங்கள் பணியாற்றிய 10 வருடங்கள் வெறும் ட்ரெய்லர் என்று நான் முன்பே கூறியிருந்தேன். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிப்பதே எங்கள் முன்னுரிமை. புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா, லட்சிய இந்தியா... இதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என்பதை நான் அறிவேன்” என்று பேசினார்.

மேலும், “2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப் பெரிய வெற்றி என்று உலகமே நம்புகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸால் 100 இடங்களைக் கூட தொட முடியவில்லை. இண்டியா கூட்டணி மெதுவாக மூழ்கிக்கொண்டிருந்ததை தேர்தலின்போது நான் தெளிவாகக் கண்டேன். இனி அவர்கள் வேகமாக மூழ்குவார்கள்” என்று அவர் பேசினார்.

> “எப்போதும் பிரதமர் மோடியுடன்...” - நிதிஷ் குமார்: “நாங்கள் எல்லோரும் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவோம் பிரதமர் மோடி அவர்களே... ஞாயிற்றுக் கிழமை நீங்கள் பிரதமராக பதவியேற்க இருக்கிறீர்கள். நான் இன்றே நீங்கள் பதவியேற்றிருக்கலாம் என விரும்புகிறேன். நீங்கள் எப்போது உறுதிமொழி ஏற்றாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நாங்கள் உங்கள் தலைமையில் இணைந்து பணியாற்றுவோம். நரேந்திர மோடி இந்தியப் பிரதமராவதை எனது ஐக்கிய ஜனதா தளக் கட்சி ஆதரிக்கிறது. இனி எப்போதும் நாங்கள் அவருடன் இருப்போம்” என்று என்டிஏ கூட்டத்தில் பேசிய ஐக்கிய ஜனத தள தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் உறுதி அளித்துள்ளார்.

> நீட் தேர்வு சர்ச்சையால் மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு: நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம், நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. சமூக நீதிக்கு எதிரானவை” என்று தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வில் ஒட்டுமொத்தமாக 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கான இந்த எண்ணிக்கை நீட் தேர்வு முடிவை நம்பகத்தன்மை இல்லாததாக ஆக்குகிறது. குறிப்பாக, ஹரியாணாவில் ஒரு மையத்தில் எழுதிய 8 பேர் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். இதில் 6 பேர் அடுத்தடுத்த வரிசை எண்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு தமிழகத்திலும், விரும்புகிற இதர மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதனிடையே, நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

> ஜூன் 24-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்: தமிழக அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஜூன் 24-ம் தேதி காலை 10 மணிக்கு துறை ரீதியான மனியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் தொடங்கும். இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஜூன் 24 -ம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது 10 நாட்களுக்கு முன்போ அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்” என்றார்.

> விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு விஜய் வாழ்த்து: “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும். வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

> சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ்!: இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தார் சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை உற்சாகத்துடன் அவர் கொண்டாடினார். துள்ளல் நடனத்துடன் அவர் உள்ளே நுழைய சக விண்வெளி வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனை போயிங் ஸ்பேஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அவருடன் பேரி வில்மோரும் சென்றுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்ட இந்த விண்கலனில் இருவரும் சுமார் 27 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர். அங்கு சுமார் 8 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ஸ்டார்லைனரின் இந்த வெற்றிப் பயணம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

> பாக். தோல்விக்கு வழிவகுத்த மும்பை கம்ப்யூட்டர் இன்ஜினியர்!: டி20 உலகக் கோப்பையில் வியாழக்கிழமை டலாஸில் நடைபெற்ற குரூப் ஏ போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அதிர்ச்சித் தோல்வியடையச் செய்தது அமெரிக்க அணி. இரு அணிகளும் 159 ரன்களில் மேட்ச் டை ஆக, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. அதில் அமெரிக்க அணி 18 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி 13 ரன்களையே எடுத்து தோல்வி கண்டது.

இதில் அட்டகாசமான சூப்பர் ஓவரை வீசியவர் நெட்ராவல்கர் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். மும்பையைச் சேர்ந்த தனது அற்புதமான இடது கை வேகப்பந்து வீச்சின் மூலம் 4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, சூப்பர் ஓவரில் பாகிஸ்தானின் அதிரடி வீரர்களான இப்திகார் மற்றும் சதாப் கானை வெற்றி பெற முடியாமல் முடக்கி தன் அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார்.

x