என்டிஏ நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு


புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க என்டிஏ ஆலோசனை கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நடந்துவருகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களும், புதிதாக மக்களவை உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்பட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற தலைவர் மற்றும் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடியின் பெயரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா அதனை வழிமொழிந்தார். இதன்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பேசி பிரதமராக மோடியை தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.

அப்போது, “பிரதமர் பதவிக்கு மோடியை முன்னிறுத்துவது இங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களின் விருப்பம் மட்டுமல்ல. இது நாட்டிலுள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு. இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தும் நாட்டின் குரல்" என்று அமித் ஷா தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடு கூறிகையில், “தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றதற்காக அனைவரையும் வாழ்த்துகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல முன்னெடுப்புகளை செய்தது. மோடிக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. அவர் தனது கொள்கைகளை கச்சிதமாக நேர்மையாக செயல்படுத்துகிறார். இன்று இந்தியாவுக்கான சரியான தலைவர் இருக்கிறார். அதுதான் நரேந்திர மோடி. இந்தியாவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் நான் எத்தனையோ தலைவர்களை பார்த்திருக்கிறேன். உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக நரேந்திர மோடிக்கு எல்லாப் புகழும் செல்ல வேண்டும். நாட்டுக்காக அவர் செய்த மிகப்பெரிய சாதனை இது. அவரது தலைமையில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெருமையை எட்டியுள்ளோம்.

இப்போது, ​​இந்த ஆட்சியில் அவர் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றப் போகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். மோடி தலைமையில், உலகில் எங்கு சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் பெறப்படுகிறது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவரது தலைமையில், இந்தியர்கள் எதிர்காலத்தில் உலகத் தலைவர்களாக மாறப் போகிறார்கள்." என்றார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது: "பிஹாரில் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது மிகவும் நல்ல விஷயம், நாங்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம். ஞாயிற்றுக்கிழமை நீங்கள் பிரதமராகப் பதவியேற்கிறீர்கள். ஆனால் நீங்கள் இன்றே பிரதமராக பதவியேற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த தேர்தலில் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜெயித்திருக்கிறார்கள். அடுத்த முறை எல்லாரும் தோற்பார்கள். எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது." இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜகவின் மக்களவைத் தலைவராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

x