அவதூறு வழக்கில் ராகுலுக்கு ஜாமீன் முதல் மாறாத ரெப்போ விகிதம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 


> அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்: பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவைக் குற்றம்சாட்டி விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அனைத்து பொதுத்துறை பணிகளுக்கும் மாநிலத்தை அப்போது ஆண்ட பாஜக அரசு 40 சதவீதம் கமிஷன் பெறுவதாக குற்றம்சாட்டியிருந்த காங்கிரஸ் கட்சி, பாஜக அரசைக் குறிவைத்து ஊழல் ரேட் கார்டையும் வெளிட்டிருந்தது.

> கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த போலீஸ் சஸ்பெண்ட்: நடிகையும், மண்டி தொகுதி பாஜக எம்.பி.,யுமான கங்கனா ரணாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த மத்தியத் தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த காவலருக்கு எதிராக வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

> “மத்திய அமைச்சரவையில் இடம் கோரவில்லை” - சிராக் பாஸ்வான்: மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி. இந்தச் சூழலில் புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டுமென்ற நிபந்தனைகள் எதுவும் தெரிவிக்கவில்லை என லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். அவரது கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் 2 முதல் 3 இடங்கள் வேண்டுமென பாஜக வசம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

> அகிலேஷின் இமாலய வெற்றியைத் தடுத்த மாயாவதி: உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால் 14 தொகுதிகளை சமாஜ்வாதி இழந்துள்ளது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத பிஎஸ்பியால் பாஜக பலன் அடைந்துள்ளது.

> ஜூன் 11-ல் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு வரும் 11-ம் தேதி சென்னையில் கூடுகிறது. அதில் பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெறுவதை தடுப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

> நீட்தேர்வு குறித்து ராமதாஸ் கருத்து: நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

> ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடரும் - ரிசர்வ் வங்கி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் பகிர்ந்து கொண்ட அவர், “நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் 4-க்கு 2 என்ற மெஜாரிட்டியில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது”என்றார். தொடர்ந்து எட்டாவது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

> நெல்லை காங்., நிர்வாகி கொலை வழக்கில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரின் சந்தேக மரணம் குறித்து வெள்ளிகிழமை திசையன்விளை அருகே அவரது தோட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

> “எங்களை விட அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டது” - பாக். கேப்டன் பாபர் அஸம்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி. இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் கூறுகையில், " அமெரிக்கா இந்தப் போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறந்து விளங்கியது. அதனால் எங்களை விட அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டது என சொல்லலாம். அவர்களுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

> நடனமாடியபடி விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த சுனிதா வில்லியம்ஸ்: இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தார் சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை உற்சாகத்துடன் கொண்டாடிய அவர் துள்ளல் நடனத்துடன் நிலையத்துக்குள்ளே நுழைந்தார். அவரை சக விண்வெளி வீரர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். இதனை போயிங் ஸ்பேஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அவருடன் பேரி வில்மோரும் சென்றுள்ளார்.

x