பங்குச் சந்தையில் ஊழல்: மோடி, அமித் ஷா மீது ராகுல் புகார்


கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் வரையிலேயே வெல்லும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இதையடுத்து கடந்த திங்கள் கிழமை பங்குச் சந்தை உச்சம் தொட்டது. ஆனால், மறுநாள் செவ்வாய்க் கிழமை தேர்தல் முடிவுகள் வெளியானபோது கருத்து கணிப்புக்கு மாறாக காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றது. அதிக இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக கூட்டணி 293 இடங்களிலேயே வென்றது.

இதனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மோடியும் அமித் ஷாவும் இணைந்து பங்குச் சந்தையில் பெரும் ஊழல் செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “ஜூன் 4-ம் தேதி பங்குச் சந்தை உச்சம் தொடும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் சில நாட்களுக்கு முன்பு கூறினார்.

தேர்தலின் போது அவர்கள் பங்குச் சந்தை குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்கியது ஏன்?இது அவர்களது வேலையா? தேர்தல் சமயத்தில் பங்குச் சந்தை குறித்து இவ்வாறு எந்தத் தலை வரும் கருத்துத் தெரிவித்தது கிடையாது. ஜூன் 4-ம் தேதி பங்குச் சந்தை உச்சம் தொடும் என்று மோடி மற்றும் அமித் ஷாவும் கூறியதால், பங்குச் சந்தையில் அதிக முதலீடு நிகழ்ந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியான போது பங்குச் சந்தை கடுமையாக சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. பங்குச் சந்தையில் முதலீடு செய்த 5 கோடி இந்திய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பாஜக கூட்டணி எத்தனை இடங்களில் வெல்லும் என்ற விவரங்கள் உளவுத் துறை மற்றும் சில அமைப்புகள் மூலம் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் ஏற்கெனவே தெரியும். இந்த விவரங்கள் தெரிந்தும் அவர்கள் பங்குச் சந்தை உச்சம் தொடும் என்று கூறியுள்ளனர்.

இதற்கேற்ற வகையில் போலியான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சிலர் லாபம் ஈட்டுவதற்காக மோடியும் அமித் ஷாவும் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இந்த மெகா ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.