விவசாயிகளை விமர்சித்ததால் கங்கனா கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்!


சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தினை பாதுகாப்பு படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் நடிகை கங்கனா ரனாவத். இவர் 74, 000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சண்டிகர் விமான நிலையத்திற்கு கங்கனா ரனாவத் நேற்று வந்தார். டெல்லிக்கு விமானத்தில் பறக்க இருந்த கங்கனாவை அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி சோதனை செய்தார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது. திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக அந்த பெண் பாதுகாப்பு அதிகாரி கங்கனா கன்னத்தில் அறைந்தாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தாக்குதலில் ஈடுபட்ட பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றது.

மகளிர் ஆணையம் கண்டனம்: இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவு: விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பொறுப்பை வகிக்கக் கூடியவர்கள் இத்தகைய செயலை செய்திருப்பதால் மிகவும் தீவிரமான சிக்கலாக இது கருதப்படும்.

குற்றத்தை இழைத்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் தலைமையகத்துக்கு இந்த புகாரை தேசிய மகளிர் ஆணையம் எடுத்துச் செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.