ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் ஆண்டு தினம்: காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய சீக்கிய அமைப்புகள்


அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் 40-வதுஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றுசீக்கிய பிரிவினைவாதி ஜர்னைல்சிங் பிந்த்ரன்வாலே உருவப்படத்தை ஏந்தியபடி வலம் வந்த சில சீக்கிய அமைப்பினர், காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.

காலிஸ்தான் தனி நாடு கோரி ஆயுதமேந்தி போராடத் தொடங்கிய சீக்கிய பிரிவினைவாதிகள், 1982-ம் ஆண்டு ஜர்னைல் சிங்பிந்த்ரன்வாலே தலைமையில் பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்தனர். பிறகு அங்கிருந்தபடி தீவிரமாக செயல்பட ஆரம்பித்தனர்.

காலிஸ்தான் பிரிவினைவாதிகளை ஒடுக்கும் நோக்கில், 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையை மேற்கொண்டார். இதன்படி, இந்திய ராணுவத்தினர் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தஞ்சம் அடைந்திருந்த பொற்கோயிலை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.

1984-ம் ஆண்டு ஜூன் 1 - 10 வரையில் நீடித்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில், 87 ராணுவ வீரர்கள் உட்பட 400 பேர் இறந்ததாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமிர்தசரஸில் ஆபரேசன் ப்ளூ ஸ்டார் நினைவுதினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவ்வாண்டு 40-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. இதில் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருப்பதற்காக 2000-க்கு மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் அமிர்தசரஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு பழி தீர்க்கும் வகையில், அவரது பாதுகாவலர்களான பியந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோர்1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம்தேதி இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.