ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் @ பஞ்சாப்


புதுடெல்லி: காலிஸ்தான் ஆதரவாளரும் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பஞ்சாபின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலின் போது பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட அம்ரித் பால் சிங் பஞ்சாப் மாநிலம், காதூர் சாஹிப் தொகுதியில் சுயேட்சையாக போட்டார். தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதான அமிரித் பால் சிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காதூர் சாஹிப் தொகுதியில் அம்ரித்பால் சிங்-ஐ எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக குல்பிர் சிங் ஜிரா, ஆம் ஆத்மி கட்சி சார்பாக லால்ஜித் சிங் புல்லார், பாஜக சார்பாக மன் ஜித் சிங் மன்னா மியான்விண்ட் உள்ளிட்டோர் களம்கண்டனர். இத்தொகுதியில் அம்ரித் பால் சிங் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் குல்பீர் சிங்கை விட 1,00,056 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார் அவர்.

பாடகரும், ஆர்வலருமான தீப் சித்து ‘‘வாரிஸ் பஞ்சாப் தே (பஞ்சாபின் வாரிசுகள்)’’ என்ற இயக்கத்தை உருவாக்கினார். சித்து சாலை விபத்தில் இறந்த பிறகு ஹர்ஜீத் சிங் உதவியுடன் அந்த இயக்கத்தின் தலைவராக அம்ரித்பால் சிங் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.