கேரளாவில் கால் பதிக்கிறது பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றி உறுதி 


திருச்சூர்: கேரள மாநில மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களவை தேர்தலில் பாஜக முதல்முறையாக கேரளாவில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.

திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் சுரேஷ் கோபி போட்டியிட்டார். அவர் அங்கு 4,00,553 வாக்குகள் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சுனில்குமாரை விட 73,148 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் சுரேஷ் கோபியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சூர் மக்களவை தொகுதியில் மொத்தம் 14,83,055 வாக்காளர்கள் உள்ளனர். நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்குபதிவில் 10,81,147 வாக்காளர்கள் வாக்கு செலுத்தினர். இது 72.11 சதவீதமாகும். தற்போது வரை 10,53,770 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சுற்று வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதன்மூலம் சுரேஷ் கோபியின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இதுவரை கேரளாவில் மக்களவை தேர்தலில் பாஜக வென்றதில்லை. சுரேஷ் கோபியின் வெற்றியின் மூலம் வரலாற்றில் முதல்முறையாக மக்களவை தேர்தலில் பாஜக கேரளாவில் தனது வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டு 28.2 சதவீத வாக்குகள் பெற்றார். இது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் கே.பி.ஸ்ரீசான் வாங்கிய 11.15 சதவீத வாக்குளை விட இரண்டு மடங்கு அதிகம்.

ஆளும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி இந்தமுறை திருச்சூர் தொகுதியை கைப்பற்ற பாஜக தலைவர்கள் பல வியூங்கள் வகுத்தனர். அதன்படி, மீண்டும் சுரேஷ் கோபியை வேட்பாளராக களமிறக்கினர்.

அவருக்கு பக்கபலமாக பிரதமர் மோடி திருச்சூரில் ‘ரோடு ஷோ’ சென்றதும், கிறிஸ்தவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதும் பாஜகவுக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியது. அதன்பலனாக தற்போது வெற்றியை பெற்றுள்ளது.

திருவனந்தபுரம் நிலவரம்: அதேநேரத்தில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் சசி தரூருக்கும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது இருவருக்கும் இடையே 8 வாக்குகள் தான் வித்தியாசம் இருந்தது.

தொடர்ந்து இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றுவந்தனர். தற்போதைய நிலவரப்படி, சசிதரூர் 3,08,640 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ராஜீவ் சந்திரசேகர் 3,03,977 வாக்குகளும் பெற்றுள்ளனர்.