வெப்ப அலையால் 87 பேர் உயிரிழப்பு


கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் வெப்ப அலையால் 87 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சராசரியாக 45 டிகிரி முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது. ஒடிசாவில் கடந்த சில நாட்களில் மட்டும் 29 பேர் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர்.

கான்பூரில் அதிகபட்சமாக 48.2 டிகிரி: உத்தர பிரதேசத்தில் வெப்ப அலையின் காரணமாக ஒரு வகை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் 13 தேர்தல் அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் அதிகபட்சமாக கான்பூரில் நேற்று 48.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

மத்திய பிரதேசத்தில் தலைநகர் போபால், குவாலியர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று சராசரியாக 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அந்த மாநிலத்தின் 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

பிஹாரில் வெப்ப அலையால் நேற்று முன்தினம் மட்டும் 9 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலத்தின் 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹரியாணாவில் நேற்று சராசரியாக 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

சத்தீஸ்கரில் நேற்று சராசரியாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அந்த மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் சத்தீஸ்கர் முழுவதும் வெப்ப அலையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜார்க்கண்ட்டில் நேற்று சராசரி யாக 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் வெப்ப அலையால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தானில் வெப்ப அலை காரணமாக கடந்த சில நாட்களில் பலர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தின் 13 மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இதர 37 மாவட்டங்களில் சராசரியாக 45 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக கடந்த சில நாட்களில் மட்டும் வடமாநிலங்களில் 87 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: எல் நினோ பாதிப்பு காரணமாக இந்தியாவின் வடமாநிலங்களில் வெப்ப அலை பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து வெப்ப காற்று இந்தியாவுக்குள் நுழைகிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய பகுதிகளில் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது.

நாடு முழுவதும் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு வெப்ப அலை உயிரிழப்பு சற்று அதிகரித்து உள்ளது. வெப்ப அலையின் காரணமாக இந்தியாவின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி வரும் 2030-ம் ஆண்டில் வெப்ப அலையால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 5 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்படும்.

வெப்ப அலையை தடுக்க நகர்ப்புறங்களில் வனப்பகுதிகளை உருவாக்க வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாத்து விரிவுபடுத்த வேண்டும். வீடுகளின் கூரைகளில் வெப்பத்தை தணிக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். தனிநபர் வாகன பயன்பாட்டை குறைத்து பொது போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும். நிலநடுக்கம், பெருவெள்ளம் போன்று வெப்ப அலையையும் இயற்கை பேரிடராக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

x