இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முதல் குளத்தில் வீசப்பட்ட  ‘இவிஎம்’ வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> மக்களவை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9, பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1 என 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி மற்றும் 7-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் காலை 11 மணி நிலவரப்படி 26.30 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

> மேற்கு வங்கத்தில் வன்முறை, குளத்தில் வீசப்பட்ட இவிஎம்: மேற்கு வங்க மாநிலத்தில் 9 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறையும் பதற்றமும் நிலவுகிறது. பங்கர் பகுதியில் உள்ள சட்வுலியா பகுதியில், இந்திய மதசார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) மற்றும் சிபிஐ (எம்) ஆதரவார்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர்.

அதேபோல், தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலி பகுதியில் முகவர்கள் சிலரை வாக்குச்சாவடிக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று வாக்குச்சாவடிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை கைப்பற்றி அருகில் உள்ள குளத்தில் வீசியது.

> மீண்டும் மோடி ஆட்சி அமையும் - யோகி ஆதித்யநாத்: மக்களவை இறுதி கட்டத் தேர்தலில் வாக்களித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “இது இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா. இன்று உபி.,யின் 13 தொகுதிகள் உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் முன்னால் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளன. தேர்தலில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் எங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும் போது ஜூன் 4 எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாளாக தெரிகிறது. அன்றைய தினம் மீண்டும் மோடி ஆட்சி அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

> “பிரதமர் பதவிக்கு ராகுல்தான் எனது தேர்வு” - கார்கே: தனியார் சேனல் ஒன்றுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் எனது விருப்பமாக உள்ளது. இது எனது தனிப்பட்ட விருப்பம். ஏனெனில், நாட்டின் இளைஞர்கள் மத்தியில் ராகுல் மிகவும் பிரபலமானவர். நாட்டை அழகான எதிர்காலத்துக்குக் கூட்டிச் செல்லும் திறனும் அவருக்கு உண்டு" என்று தெரிவித்துள்ளார்.

> ‘வெற்றியின் முகட்டில் நிற்கிறது இண்டியா கூட்டணி’- மு.க.ஸ்டாலின்: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நடைபெற்று வரும் சூழலில், ‘வெற்றியின் முகட்டில் நிற்கிறது இண்டியா கூட்டணி’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

> பிரதமர் மோடியின் தியானம் பற்றி விஷம அரசியல் - அண்ணாமலை: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதில் எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசியல் செய்கின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

> ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்: மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதுவரை 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் 30-ம் தேதி வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகளை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட தொகையை விட 182 சதவீதம் அதிகம். அந்தத் தேர்தலில் ரூ.390 கோடியை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். இதில் டெல்லி, கர்நாடகா, தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் அதிகளவில் ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

> சல்மான்கானை காரில் வைத்து தாக்க திட்டம்: பாலிவுட் நடிகர் சல்மான்கானை மகாராஷ்டிராவின் பன்வேலில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு அருகில் காரில் வைத்து கொலை செய்ய சிறையில் உள்ள கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் தாக்க திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்தக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

> வணிக சிலிண்டர் விலை ரூ.69 குறைப்பு: சர்வதேச எண்ணெய் விலை குறைப்பு காரணமாக ஜெட் எரிபொருள் அல்லது விமான எரிபொருள் 6.5 சதவீதமும், வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.69-ம் இன்று குறைக்கப்பட்டுள்ளது.

> புனே கார் விபத்து வழக்கில் சிறுவனின் தாய் கைது: புனேவில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரைத் தேடிவந்த நிலையில் மும்பையில் இருந்து நள்ளிரவு வீடு திரும்பிய அவரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக ரத்தப் பரிசோதனைக்கு சிறுவனின் ரத்த மாதிரிக்குப் பதிலாக தனது ரத்த மாதிரியை ஷிவானி கொடுத்திருந்தது அம்பலமானது. இதன் பேரில் ஷிவானி மீது போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.