பருவ மழை தொடக்கம் முதல் சசி தரூர் எதிர்வினை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> தென்மேற்கு பருமழை இன்று தொடங்கியது: தென்மேற்கு பருவமழை கேரளாவின் கடற்கரையை இன்று (மே 30) தாக்கி, வடகிழக்கு இந்தியாவை நெருங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மே 15-ம் தேதி இந்த ஆண்டுக்கான பருவமழை மே 31-ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்கணிப்புக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே பருவமழை தொடங்கி உள்ளது.

> தங்கக் கடத்தல் புகாரில் சசி தரூர் உதவியாளர் கைது: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக புதன்கிழமை சுங்கத் துறையினர் இருவரை கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவரான சிவகுமார் பிரசாத் தன்னை காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் தனிப்பட்ட உதவியாளர் என்று சுங்கத் துறையினரிடம் கூறியிருக்கிறார்.

இதனிடையே இந்தவிவகாரம் குறித்து, “நான் தர்மசாலாவில் பிரச்சாரத்தில் இருந்தபோது எனது முன்னாள் ஊழியர் சம்பந்தப்பட்ட சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கைது செய்யப்பட்ட நபர், விமான நிலைய வசதிகளை ஏற்பாடு செய்ய என்னிடம் பகுதி நேர ஊழியராக வேலை செய்து வருபவர். எந்தவிதமான குற்றச்செயல்களையும் நான் மன்னிக்கப்போவதில்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். சட்டம் அதன் கடைமையைச் செய்யட்டும்." என்று எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.

> டெல்லியில் வெப்ப பாதிப்புக்கு ஒருவர் உயிரிழப்பு: தேசிய தலைநகரில் அதிகபட்ச வெப்ப நிலை புதன்கிழமை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த நிலையில், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வெப்ப பாதிப்புக்கு உள்ளாகி 40 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளார். பிஹார் மாநிலம் தர்பங்காவைச் சேர்ந்த அவர், டெல்லியில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு 107 டிகிரி செல்சியல் காய்ச்சல் இருந்தாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கோடையில் டெல்லியில் வெப்ப பாதிப்புத் தொடர்பாக பதிவான முதல் மரணம் இது.

> டெல்லிக்கு அதன் நியாயமான பங்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் - அதிஷி: தேசிய தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை எழுந்துள்ளநிலையில், டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, டெல்லிக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய அதன் பங்கு தண்ணீர் கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், ஹரியாணா அரசின் அடாவடியான செயல் டெல்லியின் பல்வேறு சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

> 3 நாட்களாக சென்னையில் அதிக வெப்பம் பதிவு: ரீமல் புயல் உருவானதால் தமிழகத்துக்கு இயல்பாக காற்று வீசும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஆந்திர பகுதியில் இருந்து வெப்பமான தரைக்காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது. இந்தக் காற்று வலுவாக இருப்பதால், ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று தமிழகத்தினுள் நுழைய முடியவில்லை. அதன் காரணமாக, காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளது. மழை மேகங்களும் உருவாகவில்லை.

மேற்கூறிய காரணங்களால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் வெப்பம் மாநில அளவில் உச்ச அளவாக பதிவாகி வருகிறது என்று அதிக வெப்பம் பதிவாவது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

> குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை: முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

> அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி புகைப்பட கண்காட்சி: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தொடர்பான புகைப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

> வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 57 பார்வையாளர்கள்: நாடு முழுவதும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 39 தொகுதிகளுக்கு 57 பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

> இந்தியா - பாக் போட்டிக்கு உரிய பாதுகாப்பு வழங்க நியூயார் உறுதி: வரும் ஜுன் 9-ம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. மைதானத்துக்குள் நுழைந்து ‘Lone Wolf’ தாக்குதல் நடத்த உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் போட்டி நடைபெற உள்ள நசாவ் கவுண்டி மைதானத்தில் முன்னெப்போதும் இல்லாதவகையில் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுவருகிறது.

இதுகுறித்து நியூயார்க் மாநில கவர்னர் கேத்தி கோச்சுல் கூறுகையில், கூட்டத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும்படுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி மாநில போலீஸாருக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்த நேரம் வரை நம்பத்தகுந்த அச்சுறுத்தல் இல்லை என்றாலும் போட்டி நெருங்கும் போது நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

> ஐ.நா செயல்பாடு குறித்து துருக்கி அதிபர் ஆவேசம்: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஐ.நா அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார் துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன்.

x