“கடவுளால் அனுப்பப்பட்ட மோடிக்கு கோயில் கட்டி தோக்ளா கொடுப்போம்!” - மம்தா விமர்சனம்


கொல்கத்தா வடக்கு தொகுதியில் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிகட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, மக்களிடம் வாக்கு சேகரிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நடைபெற்ற ரோட் ஷோவில் பங்கேற்றார். படம்: பிடிஐ

கடவுள்தான் தன்னை பூமிக்கு அனுப்பி வைத்தார் என பிரதமர் மோடி கூறியதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். முன்னதாக, தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, “ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்” என்று கூறியிருந்தார். இதையொட்டி, ஒடிசா மாநிலம் புரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா, “புரி ஜெகந்நாதர் மோடியின் பக்தர்” என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது. பின்னர் அவர் மன்னிப்பு கோரினார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் இந்த விஷயத்தை விமர்சித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “தொழிலதிபர்கள், கவுதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோருக்கு உதவத்தான் பிரதமர் மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறாரே தவிர்த்து ஏழைகளுக்கு சேவை செய்ய அல்ல” என்று விமர்சித்தார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பிரகானாஸ் மாவட்டத்தில் நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்கிறார் ஒருவர். மற்றொரு தலைவரோ, புரி ஜெகந்நாதர் அவரது பக்தர் என்கிறார்.

கடவுளாக இருக்கக்கூடிய ஒரு நபர் அரசியலில் இருக்கக் கூடாது. கடவுள் கலவரங்களைத் தூண்டிவிடக் கூடாது. அத்தகைய நபருக்கு நாம் கோயில் கட்டி பிரசாதம், மலர்கள், இனிப்புகள் அவர் விருப்பப்பட்டால் தோக்ளாகூட வழங்குவோம்’’ என்றார்.