அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்

புதுடெல்லி: தனது ஜாமீனை நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் ஜுன் 1-ம் தேதி வரை அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த சூழலில் அதனை நீட்டிக்க கோரி கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மருத்துவக் காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்கும்படி அதில் கோரியிருந்தார்.

திங்கள்கிழமை அன்று அவரது மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்தது. மேலும், இதனை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பார்வைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தது. இந்த சூழலில்தான் அவரது மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். தனது கைது நடவடிக்கையை எதிர்த்து கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இம்மனுவை விசாரித்தது. இதனிடையே தேர்தலை முன்னிட்டு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கடந்த 10-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. ஜூலை 2ம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும்.

x