“பிஜு ஜனதா தளம் 6-வது முறையாக ஆட்சிக்கு வரும்” - வி.கே.பாண்டியன் நம்பிக்கை


ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 6-வது முறையாக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவரான வி.கே. பாண்டியன் தெரிவித்துள்ளார். பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வி.கே. பாண்டியனை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வி.கே. பாண்டியன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஒடிசாவில் 9 இலக்குகளை வைத்து செயல்படப் போவதாக பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் பாஜகவின் பிரச்சாரத்தால் பலன் அடையப் போவது பிஜு ஜனதாதளம் கட்சிதான்.

இதன்மூலம் பிஜு ஜனதா தளம் 6-வது முறையாக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. இதுவரை நடந்து முடிந்துள்ள பேரவைத் தேர்தலின் மூலமாகவே பிஜு ஜனதா தளம் மெஜாரிட்டியை எட்டி விடும்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது தேவையற்ற வகையில் பகவான் ஜெகந்நாதரின் பெயரை இழுத்து பெரிய தவறைச் செய்தது பாஜக. மேலும் ஒடிசாவின் மிகவும் பிரபலமான, 5 முறை முதல்வரான நவீன் பட்நாயக்கின் பெயரையும் இழுத்து வம்பில் மாட்டிக் கொண்டது பாஜக.

இதேபோல் பிஜு ஜனதா தள அரசு கொண்டு வந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக, தொழில்நுட்பக் கல்வி திட்டம், பழங்குடி மக்களுக்கான சிறப்பு வளர்ச்சிக் கவுன்சில், குறைந்தபட்ச ஆதரவு விலை, இலவச மின்சாரம் போன்ற திட்டங்களை நிறுத்தப் போவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதனால் பாஜக இங்கு தோல்வி அடையப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.