அரசு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: அவகாசம் நீட்டிப்பு


சென்னை: தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,530 இடங்கள் உள்ளன.

இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 10-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 24) நிறைவு பெறுவதாக இருந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tnpoly.in/ எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.