செங்கல்பட்டு அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த அறிமுக கூட்டம்


மறைமலைநகர்: செங்கல்பட்டு அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் ஆர்வமும் திறமையும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் வகையில் மாவட்டம் தோறும் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி முதல் கட்டமாக 25 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து இப்பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்தப் பள்ளிகள் 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை உண்டு உறைவிடப் பள்ளியாக செயல்பட உள்ளது. இங்கு பயிலும் மாணவ - மாணவியருக்கு, விடுதியுடன் இலவச கல்வியளிக்கப்படுகிறது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மறைமலை நகரில் உள்ள ஏ.ஆர். எம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த அரசு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டு அதில் 800 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு ஐஐடி, ஜேஇஇ, நீட் சி.ஏ ஃபவுண்டேஷன் ஆகிய தேர்வுகள் குறித்தான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அத்துடன் கல்லூரி களப் பயணத்திற்கு விஐடி, எம்.ஐ.டி. தாம்பரம் சித்த ஆய்வு மையம், கால்நடை பல்கலைக் கழகம் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப் படுகிறது. இந்தப் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 114 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு சேர்க்கைக்கான அறிமுகக் கூட்டம் பள்ளி வளாகத்தில் இன்று ( மே20ம் தேதி) காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் ச.அருண்ராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி, மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இதுபோல் மாதிரி பள்ளி திட்டம் இல்லை. அரசுப் பள்ளி மாணவா்கள் கல்வி, நுண்கலை, விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசால் சிறப்புத் திட்டமாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றி அடையும் வகையிலும், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறும் அனைத்து தேர்விற்கும் தயார்ப்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் இங்கு நடத்தப்படுகிறது. பெற்றோர்கள் மாணவர்களுக்கு இந்த நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.