பள்ளிகளில் காமராசர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: கல்வித்துறை புதிய உத்தரவு


சென்னை: காமராசர் பிறந்தநாள் விழாவை கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 'முன்னாள் முதல்வர் காமராசர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் பள்ளிகளில் விழா எடுத்து காமராசர் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு கல்வியாண்டில் வரும் ஜூலை 15-ம் தேதியன்று அனைத்துவித பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தினவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், காமராசரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணரும் வகையில் பேச்சு, ஒவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும். இதற்கான செலவினங்களை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியில் இருந்து பயன்படுத்த வேண்டும்.

இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இதுதவிர மாணவர் சேர்க்கை, கற்பிக்கும் திறன் உட்பட பல்வேறு அம்சங்களின்படி சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்படும். அவற்றை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அனைத்து முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் காமராசர் திருவுருவப் படத்தை அலங்கரித்து கல்வி வளர்ச்சி தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.