ஊரக கண்டுபிடிப்பாளர் விருது: ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை: உயர்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழகத்தில் கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல்வேறுபயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் 2 சிறந்த கிராமப்புற பகுதியை சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு 2018-19 முதல் ஆண்டுதோறும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2023-24-ம் கல்வியாண்டின் 'ஊரக கண்டுபிடிப்பாளர் விருது'க்கானவிண்ணப்பங்கள் அறிவியல் நகரம் முகமையால் வரவேற்கப்படுகின்றன.

இதையடுத்து தகுதிபெற்றவர்கள் விண்ணப்பப் படிவங்களை அறிவியல் நகரத்தின் www.sciencecitychennai.in எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர்களின் வாயிலாக அறிவியல் நகரத்துக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ‘துணைத் தலைவர், அறிவியல் நகரம், உயர்கல்வித் துறை, பி.எம்.பிர்லா கோளரங்க வளாகம், காந்தி மண்டபம் சாலை, சென்னை –600025’ என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவர்.

இதற்கான விண்ணப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உட்படகூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம்.