ராஜபாளையம் அருகே மூடப்பட்ட பள்ளிக்கு வந்த மாணவர்கள் பரிதவிப்பு


ராஜபாளையம் அருகே முகவூர் முத்துச்சாமியாபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே முகவூர் முத்துச்சாமியாபுரத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி உள்ளது. 1921-ம் ஆண்டு முதல் இப்பள்ளி செயல்பட்டு வந்தது. நிரந்தர அங்கீகாரம் பெற்ற இப் பள்ளியில் ஓர் ஆசிரியரும், 11 மாணவர்களும் இருந்தனர்.

இந்த பள்ளிக் கட்டிடம் சேதமடைந்ததாலும், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும் கடந்த கல்வியாண்டுடன் பள்ளியை மூட கடந்த பிப்ரவரியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நேற்று 9 மாணவர்கள் இப்பள்ளிக்கு வந் தனர். இதையடுத்து தற்காலிக ஆசிரியர் மூலம் பள்ளி திறக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் வந்து பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளதால் திறக்கக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் இப்பள்ளியை நிர்வகிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர் முத்துராமலிங்கத்திடம் கேட்டபோது, பள்ளிக் கட்டிடம் சேதமடைந்து இருப்பதாலும், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டது. ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாணவர்களை பெற்றோர் விரும்பும் அருகே யுள்ள பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

x