உடுமலையில் 172 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பள்ளி ‘மாதிரி பள்ளி’ ஆக தரம் உயர்த்தப்படுமா?


உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நுழைவுவாயில்.

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தளி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் முதுபெரும் பள்ளி என்ற பெருமைக்குரிய இப்பள்ளி, 1857-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது. அதன்பின், 1882-ம் ஆண்டு இருபாலர் பயிலும் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி 142 ஆண்டுகளாவது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து மேல்நிலைப் பள்ளியாகவும், பின்னர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாகவும் மாற்றங்கள் பெற்றது. எனினும் ஆங்கில வழி வகுப்புகளுக்கு இப்பள்ளிதான், பிற அரசு பள்ளிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.திமுகவின் முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்ஷா, நீதிபதியான மறைந்த மோகன், தற்போதைய மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை, முன்னாள் பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.

இதுதவிர, இப்பள்ளியில் படித்த பலர் வெளி நாடுகளில் பணிபுரிகின்றனர். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளில் சிலர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களாக உள்ளனர்.

1995-ம் ஆண்டு வரை இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 3,500 என்ற எண்ணிக்கையில் இருந்தது. காலப்போக்கில் தனியார் பள்ளி மோகம், அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்காதது, காலத்துக்கேற்ப அடிப்படை கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்படாதது உள்ளிட்டவற்றால் பள்ளியின் மாணவர் சேர்க்கையும் குறைந்து, தற்போது 800 மாணவர்கள் படித்து வருகின்றனர். கூடுதல் எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உருவானதும், இப்பள்ளியின் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் சிலர் கூறும்போது, ‘‘நாங்கள் இன்றைய சூழலில் கவுரவமான பதவியில் இருக்க அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களும் தான் காரணம். எங்களுக்கு கிடைத்த அதே மாதிரியான கல்வி, இன்றைய தலைமுறைக்கும் தேவையாக உள்ளது.

எனவே, 172 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியை மாதிரி பள்ளியாக அரசு உருவாக்க வேண்டும். மாணவர்கள் தேடி வந்து கற்கும் வகையிலான சூழலை இப்பள்ளியில் ஏற்படுத்த வேண்டும். இங்குள்ள 30 கட்டிடங்களையும் புனரமைக்க வேண்டும். புகழ்பெற்ற கலையரங்கம், மைதானம், நூலகம், ஆய்வகம் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.

கழிவறையை சுத்தம் செய்ய நிரந்தர பணியாளர்கள் நியமனம், குடிநீர் வசதி, புதிய மேஜை, நாற்காலிகள், அனைத்து வகுப்புகளுக்கும் மின் விளக்கு, மின்விசிறிகள், கூடுதலான விளையாட்டு உபகரணங்கள், ஸ்கவுட் மற்றும் என்.சி.சி பிரிவு உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

அரசு பள்ளி தலைமையாசிரியர் மு.அப்துல்காதரிடம் கேட்டபோது, ‘‘பாரம்பரியமிக்க இப்பள்ளியில் தரமான கல்வி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளியின் சுற்றுச்சுவருக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது’’ என்றார்.