புதுச்சேரி: என்சிசி சார்பில் 60 மாணவர்கள் பாய்மர படகில் 302 கி.மீ கடல் சாகசப் பயணம் துவக்கம்


புதுச்சேரி: புதுச்சேரியில் என்சிசி சார்பில் 60 மாணவ, மாணவியர் பாய்மர படகில் 302 கிமீ தொலைவுக்கு கடல் சாகசப் பயணத்தை இன்று துவக்கினர்.

புதுச்சேரி - கடலூர் என்சிசி சார்பில் ஆண்டுதோறும் பாய்மர படகில் கடல் சாகச பயணம் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டுக்கான கடல் சாகச பயணம் இன்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடைபெற்றது. பாஸ்கர் எம்எல்ஏ கொடியசைத்து பாய்மர படகில் சாகசப் பயணத்தை தொடக்கி வைத்தார்.

பாய்மர படகில் பயணத்தைத் தொடங்கும் மாணவ - மாணவியர் புதுவையிலிருந்து காரைக்கால் அடைகின்றனர். அங்கிருந்து மீண்டும் அதே வழியில் புதுவை திரும்புகின்றனர். 3 பாய்மரப் படகுகளில் 60 என்சிசி மாணவ, மாணவியர் பயணிக்கின்றனர். பயிற்சியாளர்களும் உடன் செல்கின்றனர்.

இது தொடர்பாக பயிற்சியாளர்கள் கூறுகையில், "மொத்தம் 302 கிலோ மீட்டர் தொலைவை கடக்கவுள்ள இந்த பாய்மர படகு சாகசப் பயணம் புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் வரையில் சென்று, மீண்டும் அதே வழியாக புதுச்சேரி வந்தடையும்.

இந்தக் குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம், மரம் நடுதல், கடற்கரை தூய்மைப் பணித்திட்டம் எனப் பல சமூக நலன் சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர்" என்றனர்.