மதுரை காமராஜர் பல்கலை.யை நிர்வகிக்கும் ‘கன்வீனர்’ கமிட்டிக்கு ஆளுநர் ஒப்புதல்


மதுரை: மதுரை காமராஜர் பல்கலையை நிர்வகிக்கும் ‘கன்வீனர்’ கமிட்டிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் ஜெ.குமார் கடந்த 2022-ல் நியமிக்கப்பட்டார். அவரது பணிக்காலமான 3 ஆண்டு நிறைவு பெறும் முன்பே, உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் பதவியில் இருந்து விலகினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், பணியில் இருந்து விடுவிக்கலாம் என, அனுமதி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர், துணை வேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், துணை வேந்தர் இல்லாத போது, தமிழக அரசுச் செயலர் அல்லது பிற துறை செயலர் மற்றும் 2 சிண்டிகேட் உறுப்பினர்கள் அடங்கிய "கன்வீனர்" கமிட்டி பல்கலை. நிர்வாகத்தை கவனிப்பது வழக்கம். காமராஜர் பல்கலைக்கு இதற்கான கமிட்டியை விரைந்து அமைக்க சிண்டிகேட் உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கல்லூரி கல்வி அரசுச் செயலர் கார்மேகம் தலைமையில் சிண்டிகேட் உறுப்பினர்கள் வாசுதேவன், தவமணி கிறிஸ்டோபர், மயில்வாகனம் ஆகியோர் அடங்கிய "கன்வீனர்" கமிட்டிக்கு ஒப்புதல் அளிக்க, சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறை முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் "கன்வீன" கமிட்டிக்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாக பல்கலைக் கழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய துணை வேந்தர் தேர்ந்தெடுக்கும் வரையிலும் இக்கமிட்டி பல்கலை. நிர்வாகத்தை கவனிக்கும் எனக் கூறப்படுகிறது

x