தடையின்மை சான்று அளிக்க ரூ.1 லட்சம் பெற்ற வட்டாட்சியர்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை @ ஆண்டிபட்டி


பிரதிநிதித்துவப் படம்

ஆண்டிபட்டி: பெட்ரோல் பங்க் தொடங்க தடையின்மை சான்று வழங்குவதற்காக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற ஆண்டிபட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப்பிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள தேக்கம்பட்டி என்ற கிராமத்தில் பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

இதற்காக வருவாய்த்துறை சார்பில் தடையின்மை சான்று இவருக்கு தேவைப்பட்டது. ஆகவே இச்சான்றைப் பெற ஆண்டிபட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப்பை அணுகினார். அப்போது அவர் இச்சான்றைத் தர ரூ.1லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத சுப்பிரமணி இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜனிடம் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து போலீஸாரின் அறிவுறுத்தலின்படி நேற்றுமாலை லஞ்சப்பணத்தை வட்டாட்சியர் காதர் ஷெரிப்பிடம் வழங்கினார்.

உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வட்டாட்சியரை பிடித்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது வட்டாட்சியர் காதர்ஷெரிப் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x