திருச்சி நகை வியாபாரியிடம் கத்திமுனையில் வழிப்பறி: மதுரையில் 3 பேர் கைது


பிரதிநிதித்துவப் படம்

மதுரை: வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் கத்தி முனையில் ரூ.19 லட்சம், செல்போன் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் நிர்மல் கண்ணன் (31). அடகு தங்க நகைகளை மீட்டு விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவரது நண்பர் ஜெயராமன் என்பவருக்கு பழக்கமான ஒரு நபர் திண்டுக்கல்லில் அடகு வைத்த நகைகள் சுமார் 300 பவுன் ஏலம் போவதாகவும், அதை பணம் கட்டி மீட்டு கிரையம் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய நிர்மல் கண்ணன் திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு 20ம் தேதி 2 காரில் வந்தனர்.

நகை வைத்துள்ள நபர் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் பகுதியில் இருப்பதாக கூறியதால் நிர்மல் கண்ணன் மற்றும் ஜெயராமன், சிவா, பிரபாகரன் ஆகியோர் ஒரு காரில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு வாடிப்பட்டிக்கு சென்றனர். மாலை 6.30 மணிக்கு பாண்டியராஜபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் பெருமாள் பட்டி ரயில்வே ரோடு அருகே காரில் அழைத்துச் சென்றார். அப்போது, அங்கு இருந்த 25 முதல் 30 வயது வரை மதிக்கத்தக்க 6 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நிர்மல் கண்ணனிடம் இருந்து ரூ.13 லட்சம், செல்போன் மற்றும் சிவாவிடம் இருந்து ரூ.6 லட்சம், செல்போன், பிரபாகரனிடம் ஒரு செல்போனும் பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்து நிர்மல் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் வாடிப்பட்டி கால் நடை மருத்துவமனை முன்பாக நடத்திய வாகனச் சோதனையின் போது, இருசக்கர வாகனங்களில் சென்ற பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (23) ராமராஜபுரத்தை சேர்ந்த ஆனந்த் (25 ) அர்ஜுனன் (25) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர்.

விசாரணையில், மூவரும் தங்க நகை அடகு வியாபாரி நிர்மல் கண்ணன் மற்றும் அவரது நண்பரிடம் ரூ. 19 லட்சம் வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.59 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும், மூவரையும் கைது செய்த போலீஸார், வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

x