கள்ளக்குறிச்சியில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுட்டவர் மீது குண்டாஸ்


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (54). இவர் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்துள்ளார். இது தொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸார் ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் ரமேஷுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், கடலூர் மத்திய சிறையில் உள்ள ரமேஷை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை அளித்தார்.