கடலூர் அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை


காடாம்புலியூர்: காடாம்புலியூரை அடுத்த காட்டாண்டிக் குப்பத்தைச் சேர்ந்த தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காடாம்புலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரை அடுத்த காட்டாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த குமரவேல் (32) என்பவருக்கு ஏற்கனவே ஒரு திருமணமாகி, அப்பெண் அவரை விட்டு விலகிய நிலையில், ஓராண்டுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த மீனா (20) என்ற பெண்ணை மறுமணம் செய்துள்ளார். குமரவேல் முதல்முறையாக திருமணம் செய்த பெண்ணுடன் வாழும்போது, குழந்தை பேறு இல்லாத காரணத்தினால் மீண்டும் வேறு பெண்ணுடன் திருமணம் செய்த நிலையிலும் அவர்களுக்கு குழந்தை பேறு இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் இருவரும் நேற்று வீட்டில் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் கண்டு, காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, குமரவேலுவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.