காஞ்சிபுரம் அருகே மூதாட்டியைக் கொன்று ரூ.6 லட்சம் மதிப்பலான நகைகள் கொள்ளை


பிரதிநிதித்துவப் படம்

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுணா (65). இவர் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். இவரது மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் வாடகைக்கு உள்ளனர்.

சுகுணாவின் வீட்டருகே அங்கன்வாடி, பள்ளி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நியாய விலைக் கடை ஆகியவை உள்ளன. இதனால் பகலில் எப்போதும் மக்கள் இந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்கும்.

இந்நிலையில் நேற்று சுகுணாவின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுகுணாவை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சுமார் ரூ.6 லட்சம் ரூபாய் மதிப்புள் செயின், வளையல் உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜா பாத் போலீஸார், கொலையுண்ட சுகுணாவின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.