கொலை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: ராமநாதபுரம் டிஐஜி உத்தரவு


ராமநாதபுரம் சரக டிஐஜி துரை

ராமநாதபுரம்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மண்டபம் முகாம் காவல் ஆய்வாளர் சத்திய சீலாவை ராமநாதபுரம் சரக டிஐஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்தியா நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 22-ம் தேதி சுவாமி சிலை வைப்பது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஊர் முக்கிய பிரமுகர் ராமர் (60), கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் காவல் ஆய்வாளர் மற்றும் சைபர் க்ரைம் காவல் நிலைய கூடுதல் பொறுப்பு காவல் ஆய்வாளர் சத்திய சீலா (45) உள்ளிட்ட சிலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் சத்திய சீலா மற்றும் ராம்குமார் உள்ளிட்ட 3 பேரை நேற்று பெங்களூருவில் வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் கைது செய்தனர். அதனையடுத்து கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சத்திய சீலாவை, ராமநாதபுரம் சரக டிஐஜி துரை இன்று (மே 28) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.