மின்கம்பம் மாற்றி அமைக்க லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அலுவலர் @ திருச்சி


அன்பழகன்.

திருச்சி: திருச்சி அருகே மின் கம்பம் மாற்றி அமைக்க ரூ.15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட மின் வாரிய அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 46). இவர் எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் செய்து கொடுத்து வருகிறார். திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு அப்படி ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்த அந்தோணி, அந்த வீட்டின் முன்பு இடையூராக இருந்த உயர் மின்னழுத்த கம்பத்தை மாற்றுவதற்கு கிராப்பட்டியில் உள்ள மின்வாரிய உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தை அணுகி இருக்கிறார்.

அந்த அலுவலகத்தின் வணிக உதவியாளர் அன்பழகன் கூறியதன் பேரில் மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கான கட்டணமாக ரூ.35 ஆயிரத்தை அந்தோணி ஆன்லைனில் கடந்த மாதம் 15-ம் தேதி செலுத்தி இருக்கிறார்.

கட்டணம் செலுத்தி ஒரு மாதம் கழித்து அன்பழகனின் அறிவுறுத்தலின் பேரில் அந்தோணி நேற்றுக் (27.5.24) காலை சுமார் 11.30 மணி அளவில் அன்பழகனை மீண்டும் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். அப்போது, மின் கம்பம் மாற்ற வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என அந்தோனியிடம் அன்பழகன் கேட்டதாகத் தெரிகிறது.

தன்னால் அவ்வளவு தொகை தர முடியாது என அந்தோணி சொன்னதால் ஐந்தாயிரம் குறைத்துக் கொண்டு ரூ.15 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே உங்களது வேலையை செய்து தர முடியும் என அன்பழகன் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுத்து வேலையை முடிக்க விரும்பாத அந்தோணி, இது தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின்படி இன்று (28.5.2024) காலை 11 மணியளவில் அந்தோணியிடமிருந்து அன்பழகன் லஞ்சமாக ரூ.15 ஆயிரத்தைப் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அன்பழகனை கையும் களவுமாக பிடித்தனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து கிராப்பட்டி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.