மதுரை அருகே சாலை விபத்தில் சிக்கி காதலர்கள் இருவர் பரிதாப மரணம்


பிரதிநிதித்துவப் படம்

மதுரை: மதுரை அருகே சாலை விபத்தில் சிக்கி காதலர்கள் இருவர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம், ஆண்டார் கொட்டாரம் அருகிலுள்ள கருப்பபிள்ளையேந்தலைச் சேர்ந்தவர் போஸ். இவரது மகன் முத்துக்குமார் (29). இவர் சென்னை மாதவரம் பகுதியிலுள்ள ஐடி நிறுவனத்தில் எலெக்ட்ரீசினாக பணிபுரிந்தார். அப்போது, அந்நிறுவனத்தில் பணியாற்றிய சென்னை மாதவரம் கணபதி தோட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் பவித்ராவை (24) முத்துக்குமார் காதலித்துள்ளார். அதே நிறுவனத்தில் சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் பணிபுரிந்தார்.

அவருக்கு கடந்த 26-ம் தேதி சிவகங்கையில் திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்க முத்துக்குமாரும், பவித்ராவும் திட்டமிட்டனர். இதற்காக இருவரும் மதுரைக்கு வந்தனர். மதுரையில் இருந்து முத்துக்குமாரின் டூவீலரில் சிவகங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர். திருமணத்தில் பங்கேற்று விட்டு இருவரும் நேற்று மதுரைக்கு டூவீலரில் திரும்பினர். வரிச்சியூர் அருகே உறங்கான்பட்டி அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று காதல் ஜோடி வந்த பைக்கின் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் பவித்ரா சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். முத்துக்குமார் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது தொடர்பாக கருப்பாயூரணி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.