விருதுநகரில் கஞ்சா விற்ற இருவர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்


சுப்புராஜ், கல்யாணசுந்தரம், பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலங்கள்

விருதுநகர்: விருதுநகர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி பவித்ரா தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, விருதுநகரில் பல்வேறு இடங்களில் தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விருதுநகர் அருகே கன்னிச்சேரிபுதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சுப்புராஜ் (30) என்பவரை தனிப்படை போலீஸார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் 10 பாக்கெட்டுகளிலிருந்த கஞ்சா பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (27) என்பவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை சுப்புராஜ் வாங்கி வந்தது தெரியவந்தது. அதையடுத்து, கல்யாண சுந்தரத்தையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 263 பொட்டலங்களிலிருந்த 1 கிலோ கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கல்யாண சுந்தரம் திருநெல்வேலியிலிருந்துர் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. பிடிபட்ட கஞ்சா வியாபாரிகள் இருவரும் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து வச்சக்காரபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து சுப்புராஜிடமும் கல்யாண சுந்தரத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.