சொத்து தகராறு: மருமகளை எரித்துக் கொன்ற மாமனார் கைது @ முதுகுளத்தூர்


பிரதிநிதித்துவப் படம்

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே சொத்து பாகப் பிரிவினை காரணமாக மருமகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த மாமனாரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள முத்துவிஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசு. இவரது மகன் ஆரோக்கிய பிரபாகர். இவரும், தட்டான்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த உமா என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் உமாவின் கணவர் ஆரோக்கிய பிரபாகர் மற்றும் அவரது இளைய மகள் ஜெமி தெரசா ஆகியோர் உயிரிழந்தனர். அதனால் உமா தனது மாமனார் வீட்டில் அவரது மூத்த மகள் மரிய ஜெலினா (11) உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் மாமனாருக்கும், அவருக்கும் சொத்து பாகப் பிரிவினை செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி உமா பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து கீழத்தூவல் போலீஸார், தீயக்காயங்களுடன் இருந்த உமாவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அன்றே தினமே சிகிச்சை பலனின்றி உமா உயிரிழந்தார். போலீஸார் தற்கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த நிலையில், தனது சகோதரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உமாவின் சகோதரர் தினேஷ் கீழத்தூவல் போலீஸில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் மாமனார் ஜேசு, மருமகள் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஜேசுவை கைது செய்த போலீஸார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர்.