நூதன முறையில் பெண்ணிடம் நகை பறிப்பு: உடுமலையில் 8 பேர் கும்பல் கைது


உடுமலை: உடுமலையில் பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உடுமலை சர்தார் வீதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி மீனா(82). கடந்த 18-ம் தேதி இவர் ரேசன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் தனியாக நடந்து வந்தார். அப்போது அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்கள் தங்களை போலீஸார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, “கழுத்தில் அணிந்திருப்பது தங்க நகையா?” என மீனாவிடம் கேட்டுள்ளனர்.

மீனா ஆமாம் என்று சொன்னதும், “திருடர்கள் பிடுங்கிச் சென்று விடுவார்கள். நகையை கழற்றி கொடுங்கள். பர்சில் போட்டு தருகிறோம். அதனை பத்திரமாக கொண்டு செல்லுங்கள்” என்று அந்த இருவரும் நயமாகப் பேசி இருக்கிறார்கள். இதை உண்மை என நம்பி நகையை கழற்றிக் கொடுத்துள்ளார் மீனா. அவர்களும் நகையை வாங்கி மீனாவின் பர்சுக்குள் வைப்பது போல் பாசாங்கு செய்திருக்கிறார்கள்.

இதை அறியாத மீனா, அவர்களிடமிருந்து பர்சை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போயிருக்கிறார்.ஆனால், வீட்டுக்குச் சென்று பார்த்த போது பர்சுக்குள் செயினுக்குப் பதிலாக கூலாங்கற்கள் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மீனா, உடனடியாக கணவரை அழைத்துக் கொண்டு போய் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அவரது புகாரின் பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து சங்கிலையை நூதனமுறையில் பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று உடுமலையை அடுத்த பாலப்பம்பட்டி பைபாஸ் ரோடு ஜங்ஷனில் போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாகத் தெரிந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 சவரன் நகை, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், “நகைகளை அணிந்து செல்லும் வயதான பெண்களிடம் தங்களை போலீஸ் என்று கூறி, நூதன முறையில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பல் ஒன்று உடுமலையிலும் தங்களது கைவரிசை காட்டியது. இவர்களால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் தேடினோம்.

அந்த வகையில் இன்றைய வாகனச் சோதனையின் போது 8 பேர் கொண்ட அந்தக் கும்பல் வசமாக சிக்கிவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஜாபர் உசேன்(34), இமாம் அலி(28), வாசித் அலி(55), அன்வர் உசேன்(30), அப்சல் அலி(23), நூர் முகம்மது(42), ஹசன் அலி (44) உள்ளிட்ட அந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்” என்றனர்.

இதனிடையே, பிடிபட்ட 8 பேர் கும்பல் குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன. இந்தக் கும்பல் திருடுவதற்கு பயன்படுத்திய வாகனங்களின் நம்பர் பிளேட்களை அடிக்கடி மாற்றியுள்ளனர். வயதானவர்களை குறிவைத்து திருட வரும்போது இரண்டு பேர் மட்டும் சென்று நகைகளை ஏமாற்றி திருடிக் கொண்டு அதன்பின் காரில் காத்திருப்பவர் களுடன் சேர்ந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸார் தங்களை பின் தொடராமல் இருக்க சிறிது தூரம் சென்றவுடன் அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்தும் கார் மற்றும் பைக்கின் நம்பர் பிளேட்டுகளை மாற்றியும், ஆட்கள் மாறி மாறி காரை ஓட்டியும், உடைகளை மாற்றியும் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இந்தக் கும்பலை கண்டுபிடிப்பது போலீசாருக்கு பெரிய சவாலாக இருந்தது. வேறு சில மாவட்டங்களிலும் இந்தக் கும்பல் இதே ரீதியில் கைவரிசை காட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாது அடுத்த ஆபரேஷனாக கேரளா சென்று அங்கும் இந்தக் கும்பல் இதேபோன்று கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரோட்டோரத்தில் ஹெல்மெட் விற்பது, மூக்குக் கண்ணாடி விற்பது போன்ற தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு நோட்டம் பார்த்து இவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.