கேரளாவைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் காருக்குள் விஷம் அருந்தி தற்கொலை @ தேனி


தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் கேரளாவைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோர் காருக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையாக கம்பம்மெட்டு அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சேனைஓடை அருகே கேரள பதிவெண் கொண்ட கார் ஒன்று தனியே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது.

அந்தப் பகுதி வழியாக காட்டு வேலைக்குச் சென்றவர்கள் அருகில் சென்று காருக்குள் பார்த்த போது உள்ளே மூன்று பேர் பிணமாக, இருக்கையில் சரிந்து விழுந்து கிடந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் காரை திறக்க முயன்ற போது உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக கம்பம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீஸார் கார் கதவின் பூட்டை உடைத்து மூவரது உடல்களையும் கைப்பற்றினர். காரில் இருந்த ஆவணத்தின் அடிப்படையில் இறந்தவர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கேரள போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், இறந்தவர்கள் கோட்டயத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஜார்ஜ் (45) அவரது மனைவி மெர்சி(40) மகன் அகில்(24) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஜவுளி வியாபாரம் செய்த ஜார்ஜ் சமீபகாலமாகவே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்திருக்கிறார்கள். இந்நிலையில் மூவரும் யாருக்கும் தெரியாமல் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

அருகில் உள்ளவர்களின் தகவலின் அடிப்படையில் உறவினர்கள் கோட்டயம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற இவர்கள், தமிழக கேரள எல்லையில் காருக்குள்ளே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.