மதிப்பிழக்கப்பட்ட பணம் ரூ.1 கோடியை வீட்டில் பதுக்கிய ரவுடி கைது @ சேலம்


மதிப்பிழக்கப்பட்ட பணம் ரூ. 1 கோடி மற்றும் கைது செய்யப்பட்ட ரவுடி சபீர்

சேலம்: சேலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிழக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார், ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம், அம்மாபேட்டை, ராமலிங்கம் தெருவை சேர்ந்த ரவுடி சபீர் (32). இவர் மீது காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ரவுடி சபீர் வீட்டில் அம்மாபேட்டை போலீஸார் சோதனையிட்ட போது, ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் மதிப்பிழக்கப்பட்ட நோட்டுகளை ஆய்வு செய்ததில், அது அனைத்தும் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக புழக்கத்தில் இருந்த உண்மையான நோட்டுகள் என்பது தெரியவந்தது.

ரவுடி சபீரை போலீஸார் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சபீரிடம் , அவரது கூட்டாளிகள் இருவர் இந்த ஒரு கோடியை கொடுத்து மாற்றி தர கூறியுள்ளனர். ஆனால், சபீரால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை மாற்ற முடியாத நிலையில், வீட்டில் பதுக்கி வைத்திருந்துள்ளார்.

இதனிடையே, கூட்டாளிகளில் ஒருவர் இறந்து விட, மற்றொரு கூட்டாளியிடம் பணம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது, ஒரு லட்சம் செலவாகிவிட்டதாகவும், அந்த பணத்தை கொடுத்து, மதிப்பிழக்கப்பட்ட ஒரு கோடியை வாங்கி செல்லும்படி சபீர் கூறி, பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அம்மாபேட்டை போலீஸார் பண மதிப்பிழக்கப்பட்ட ஒரு கோடியை கைப்பற்றி, ரவுடி சபீரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதிப்பிழக்கப்பட்ட ஒரு கோடி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.