திருவள்ளூர் | இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் கொலை: காங்கிரஸ் பிரமுகர் உட்பட 5 பேர் கைது


திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி(45). இந்து மறுமலர்ச்சிமுன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் மாநில தலைவரானஇவர் நேற்று முன் தினம் பூந்தமல்லி - குமணன் சாவடியில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்த விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது காட்டுப்பாக்கம், ஸ்டாலின் நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார்(34) என்பதுதெரிய வந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகுமார், குமணன்சாவடியை சேர்ந்த, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவரான கோபால்(61), சந்தோஷ்குமார்(32), ராஜேஷ்(32), மாங்காட்டைச் சேர்ந்த சம்பத்குமார்(45) ஆகிய 5 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது:

காங்கிரஸ் பிரமுகர் கோபாலின் மனைவி கவுரி, கடந்த சில ஆண்டுகளாக கோபாலை விட்டு பிரிந்து ராஜாஜியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், ராஜாஜி, கவுரியை தன் மனைவி என குறிப்பிட்டு, சமூகவலைதள பக்கங்களில் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் கவுரி உயிரிழந்த நிலையில், தன்மனைவி கவுரி பெயரில் கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து உள்ளதாக ராஜாஜி, பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியதோடு, சமூகவலைதள பக்கங்களில் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார்.அதுமட்டுமல்லாமல், கோபாலின் சொத்துகளில் பெரும்பகுதி கவுரியின் பெயரில் இருக்கிறது. அதனைராஜாஜி அபகரிக்க முயன்றுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில், ராஜாஜியின் தம்பி கண்ணனுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் ஏற்பட்ட தகராறில், கிருஷ்ணகுமார், கல்லை தூக்கி கண்ணன் காலில் போட்டதில் அவர் கால் உடைந்தது. இதனால், தலைமறைவாக இருந்து வந்த கிருஷ்ணகுமாரை தொடர்புகொண்ட கோபால், ‘‘அவர்கள் உன்னை கொன்றுவிடுவார்கள். அதற்குள் நீ முந்திக்கொள். நான்பார்த்து கொள்கிறேன்’’ என கூறி,ராஜாஜியை கொலை செய்ய கிருஷ்ணகுமாரை தூண்டியுள்ளார்.

இதையடுத்து, கிருஷ்ணகுமார், சம்பத் உள்ளிட்டோரின் உதவியோடு ராஜாஜியை கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது.