நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு:  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு


நெல்லை ஜெயக்குமார் தனசிங் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

சென்னை/நெல்லை: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தன்சிங். இவர், அம்மாவட்டத்தில் உள்ள திசையன்விளையை அடுத்த கரைசுத்துப்புதூரில் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 4-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்டு பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக உவரி காவல் நிலைய போலீஸார், ‘சந்தேக மரணம்’ என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.

போலீஸாரின் விசாரணை மற்றும் சோதனையில், ‘ஜெயக்குமார் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கெனவே எழுதி வைத்திருந்த 2 கடிதங்கள் கிடைத்தன. அதில் ‘மரண வாக்குமூலம்’ என்ற பெயரில் ஜெயக்குமார் எழுதியிருந்த ஒரு கடிதத்தில், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் இவர்கள்தான் காரணம் என்று கூறி 32 பேரின் பெயர்கள் குறிப்பிட்டு பட்டியலிட்டு இருந்தார்.

இதையடுத்து, ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக துப்பு துலக்க தென்மண்டலஐ.ஜி. கண்ணன் உத்தரவின்பேரில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், நெல்லை காவல் ஆணையர் மூர்த்தி, எஸ்.பி. சிலம்பரசன் உள்ளிட்ட அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

ஜெயக்குமார் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த 32 பேரிடமும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஜெயக்குமாரின் குடும்பத்தினர், வீட்டில் வேலைசெய்த பணியாளர் என அடுத்தடுத்து 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன் சிசிடிவி கேமரா காட்சிகள், செல்போன் உரையாடல் தொடர்புகள் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டன.

எனினும் ஜெயக்குமார் மரண வழக்கில் துப்பு துலங்கவில்லை. 20 நாட்களாகியும் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்ற விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டிஜிபி உத்தரவையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள், பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் சோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை வள்ளியூர் டிஎஸ்பி யோகேஸ்குமார் வழங்கினார். இதுவரை யார், யாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் விளக்கினார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையில், சிபிசிஐடி போலீஸார் 10 பேர் கரைசுத்துப்புதூரில் ஜெயக்குமார் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஜெயக்குமாரின் வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வுசெய்தனர். சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ள நிலையில் மர்ம மரணத்துக்கு விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

x