ஓடும் ரயில்களில் பெண்களிடம் நகை பறிப்பு - இருவர் மீது குண்டாஸ் @ சென்னை


சதீஸ், குமரேசன்.

சென்னை: ஓடும் ரயில்களில் பெண்களிடம் தங்க நகைகளை பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகருக்கு ஒரு விரைவு ரயில் கடந்த மாதம் 21-ம் தேதி இரவு புறப்பட்டது. இந்த ரயிலில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூருக்கு செல்வதற்காக, எண்ணூரைச் சேர்ந்த லட்சுமி (56) பயணம் செய்தார். ரயில் புறப்பட்டதும் லட்சுமி கழிவறைக்குச் சென்றார்.

அங்கிருந்து திரும்பியபோது, கழிவறை அருகே நின்ற அடையாளம் தெரியாத நபர், லட்சுமி கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதேபோல, இரண்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக, ரயில்வே போலீசில் பாதிக்கப்பட்ட பெண் பயணிகள் புகார் கொடுத்தனர். இதன்பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் புகார்தாரர்கள் கொடுத்த அடையாளத்தின் அடிப்படையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஞ்சாயத்தைச் சேர்ந்த குமரேசன் (29), சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்(30) ஆகியோரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஓடும் ரயில்களில் 3 பெண்களிடம் தங்க நகைகளை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 7 சவரன் தங்க நகைககளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குமரேசன், சதீஸ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

x