தடை செய்யப்பட்ட சரவெடியை ஏற்றி வந்த சரக்கு வாகனம் பறிமுதல் @ சிவகாசி


சிவகாசி: சிவகாசி அருகே உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடியை ஏற்றி வந்த மினி சரக்கு வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சரவெடி உற்பத்தி செய்த ஆலையின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளனர்.

சிவகாசி அருகே நெடுங்குளம் பகுதியில் இன்று காலையில் வந்த மினி சரக்கு வாகனத்தை தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் தனி வட்டாட்சியர் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட சரவெடி பெட்டிகளை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.

இது குறித்து ஓட்டுநரிடம் விசாரித்ததில், நதிக்குடியில் உள்ள வைரமுத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான வி.ஜி.ஆர் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் இருந்து பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு வந்ததாக தெரிவித்தார். அந்த வெடிகளை நெடுங்குளத்தில் உள்ள சித்தி விநாயகா டிரான்ஸ்போர்ட் குடோனில் இருப்பு வைக்க கொண்டு செல்வதாகவும் கூறினார். இதையடுத்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில் நதிக்குடி வி.ஜி.ஆர் ஃபயர் ஒர்க்ஸ் உரிமம் ஏற்கெனவே மாவட்ட வருவாய் அலுவலரால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், விதிமீறி சரவெடி உற்பத்தி செய்தது தெரிய வந்திருப்பதால் ஆலையின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

x